படத்தில் நம்ப முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன : அக்ஷய்குமார்'2.0' படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் உள்ளதாக அக்‌ஷய்குமார் தெரிவித்துள்ளார்.ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற  உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர்கள் மத்தியில் அக்‌ஷய்குமார் பேசியதாவது:

''இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சாரின் நடிப்பு அதை மிஞ்சிவிட்டது. இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். ஷங்கர் ஓர் இயக்குநராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது''

இவ்வாறு அவர் பேசினார்.