அறம் : நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு தரமான படம்


நயன்தாரா நடித்து கோபி நைனார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் அறம். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வெளிவந்துள்ள தரமான படம். படத்தில் கலெக்டராக வரும் மதிவதனி (நயன்தாரா ) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நயன்தாரா ஒரு கலெக்டராக கெத்து காட்டியிருக்கிறார். ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை காப்பாற்ற போராடும் ஒரு கலெக்டர். காப்பாற்ற சாத்திய கூறுகள் இல்லாத நிலையில் அவர் அந்த குழந்தையை காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் கதை. இந்த கதையில் எவ்வளவு சமூக எவ்வளவு சமூக அவலங்களை தோலுரித்து காட்ட முடியுமோ அத்தனையும் காட்டியிருக்கிறார்.

நயன்தாராவை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர்கள் தன்ஷிகாவின் (ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ) பெற்றோராக வருபவர்கள். நிலத்தடி நீர் உவர் நீராக மாறிய ஒரு ஊரிலிருந்து கதை தொடங்குகிறது. அந்த ஊரில் இருப்பவர்கள் தண்ணீருக்காக படும் துயரங்களை கண் முன் காட்டியிருக்கிறார் இயக்குனர். இந்தப்படத்தில் இருக்கும் மற்றோரு சிறப்பம்சம் படத்தின் வசனங்கள். காசுக்கு பாட்டில்ல தண்ணிய வித்தா குடிக்கிறதுக்கு தண்ணி எப்படி வரும் என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன. படத்தில் பல இடங்களில் அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளின் அலட்சியத்தையும் தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அரசு அதிகாரிகள் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தாலும் அரசியல் வாதிகள் எப்படி அவர்களை தடுக்கிறார்கள் என்று தத்ரூபமாக காட்டியிருக்கிறார். அதே நேரத்தில் மக்களும் அதைப் போன்ற அரசியல் வாதிகளையே தேர்ந்தெடுக்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.  ஒரு ஏழை குடும்பத்தில் இருக்கும் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தால் அதை காப்பாற்ற வருபவர்கள் எவ்வளவு அலட்சியமாக வருகிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார். சமூக கருத்துக்கள் எவ்வளவு இருந்தாலும் ஒரு திரைப்படமாக பார்க்கும் போது படம் த்ரில்லாகவே இருக்கிறது. 

ராக்கெட்டிற்கு பல கோடிகள் செலவு செய்தாலும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற சில ஆயிரங்கள் செலவு செய்து ஒரு இயந்திரம் வாங்க தயாராக இல்லாத ஒரு நாட்டில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கோபி. சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த கத்தி படத்தின் கதை தன்னுடையது தான் என்று கோபி என்பர் வழக்கு தொடர்ந்தார். அவர் இவர் தானா என்பது தெரியவில்லை ஒருவேளை இவராக இருந்தால் இவருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். ஏனெனில் அந்த படத்தை விட பல மடங்கு அழுத்தமாக பல கருத்துக்களை இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Thirai Galatta Rating : 3.75/5