மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலை விழாவில் ரஜினி,கமல் பங்கேற்கின்றனர் !


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 'நட்சத்திர கலை விழா' மலேசியாவில் ஜனவரி 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல் கலந்து கொள்கின்றனர்.நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக விரைவில் நட்சத்திர கலை விழா ஒன்று திட்டமிடப்படும் என்று நடிகர் சங்கப் பொதுக்குழுவின் முடிவில் தெரிவித்திருந்தார்கள். இது தொடர்பாக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த கலை நிகழ்ச்சியில் நடனம், நகைச்சுவை மற்றும் நடிகர்களின் கலந்துரையாடல் என பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது நடிகர் சங்கம்.மேலும், ஆறு அணிகள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த அணிகளுக்கு சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்கவுள்ளார்கள்.

இந்த நட்சத்திர கலை விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவுள்ளார்கள். மேலும், மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. அதில் மலேசிய நடிகர்கள் ஒர் அணியிலும் தமிழ் சினிமா நடிகர்கள் ஒர் அணியிலும் பிரிந்து மோதவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியை மலேசிய அரசின் உதவியுடன் சிறப்பாக நடத்தவுள்ளார்கள்.