'இரவுக்கு ஆயிரம் கண்கள்': அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்


நாயகன் அருள்நிதியை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் நள்ளிரவில் ஒரு வீட்டில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். அது பற்றி புகார் கொடுத்தவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் அருள்நிதி தான் அந்த வீட்டிலிருந்து வந்ததாக அடையாளம் காட்டுகிறார். உடனே அங்கிருந்து அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிக்கிறார் அருள்நிதி. அங்கிருந்து அந்த கொலையை யார் செய்தார் என்கிற கேள்விக்கு விடை தேடி செல்கிறார் நாயகன். அருள்நிதி மட்டுமல்ல படம் பார்க்கும் ரசிகர்களையும் சஸ்பென்ஸ் குறையாமல் வைத்திருக்கிறார் இயக்குனர் மாறன்.

வழக்கமாக அணைத்து படத்திலும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுக்கும் அருள்நிதி இந்த படத்திலும் நல்ல கதையை தேர்வு செய்திருக்கிறார். கால் டாக்ஸி டிரைவராக வரும் அருள்நிதி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மஹிமா நம்பியாரின் நடிப்பும் ரசிக்கும் படி இருந்தது. இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகளில் இருவரின் கெமிஸ்ட்ரியும் அற்புதம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லனாக நடித்திருக்கும் அஜ்மல் அவரின் வில்லன் கேரக்டரை சரியாக செய்திருக்கிறார். லட்சுமி ராமகிருஷ்ணன், சாயாசிங், ஆனந்தராஜ், வித்யா பிரதீப், சுஜா வருணி என அனைவரும் அவர்களுக்கான கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கின்றனர்.  

கொலை செய்தது யார், என்ன காரணம் என்கிற சஸ்பென்ஸை யாரும் யூகிக்க முடியாத வகையில் படத்தின் இறுதியில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.  இவை தவிர படத்தின் சில குறைகளும் ஆங்காங்கே இருக்கின்றன. லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் மரணம் பற்றிய கேள்விகளுக்கு விடை இல்லை. சாயா சிங் வரும் காட்சிகள் திரைக்கதையின் வேகத்தை சற்று குறைக்கின்றன. இன்னும் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இத்திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக இருக்கும்.Thirai Galatta Rating : 3.25/5